Sunday, 17 July 2011

பொண்வண்டு

,
அது ஒரு மழைக்காலத்தின் காலைப்பொழுது அவசர அவசரமாக வயல் வெளிகளுக்கிடையே புகுந்து நானும் முருகனும் பள்ளிக்கு ஓடுகிறோம் , காலை இறைவணக்கம் முடிந்து வகுப்புகள் தொடங்கி இருக்கும் என்பதால் குறுகலான வரப்புகளின் வழியே கீழே மலர்ந்து கிடந்த சங்கு பூக்களை மிதித்து கொண்டு விரைவாக ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
வயல்வெளியெங்கும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுருந்தார்கள் . எங்களுக்கு முன்னே வேறு சிலரும் ஓடிக்கொண்டு இருந்தார்கள் ஓடிக்கொண்டு இருந்தவர்கள் திடீரென தனித்தனியாக மரவள்ளி செடிக்குள் பதுங்கினர். முருகன் தான் சொன்னான் “ டேய் நாம வசமா மட்டிக்கிட்டோம் காட்டுக்காரன் அங்க உக்கார்ந்து இருக்கான் அவனை தாண்டி நாம பள்ளிக்கூடம் போக முடியாது நான் அப்பவே சென்னேன் ரோட்டோரமாய் போலமுன்னு நீ தான் காட்டுக்குள்ள பூந்து போனா சீக்கிரம் போலாமுன்னு “ நானோ கீழே உக்கார்ந்து பட்டாசு செடியின் காய்களை பிய்த்துக்கொண்டு இருந்தேன் பட்டாசு காய்களின் முனையை எச்சிலில் தொட்டு கைகளில் .வைத்திருந்தால் சில நொடிகளில் பட் பட்என்று வெடிக்கும் . எங்களுக்கு முன்னால் ஓடி காட்டுக்குள் ஒளிந்தவர்களை காட்டுக்காரன் பார்த்துவிட்டான் அவங்களை அடிக்க வேகமாக ஓடினான் . அவங்களோ தனித்தனியாக ஓடியதால் அவர்களை பிடிக்க முடியவில்லை .இதுதான் சமயமென்று நானும் முருகனும் பள்ளிக்கு வேகமாக ஓடினோம் .பள்ளியில் வகுப்புகள் ஆரம்பித்து இருந்தது .
எங்களோட ஏழாம் வகுப்பில் கணக்கு டீச்சர் இருந்தாங்க . எங்களை பார்த்ததும் “ராஜாக்களுக்கு இப்போ தான் பள்ளிக்கு வர நேரம் கிடைச்சுதா ? சரி சரி உள்ள வாங்க என்றார் . நனும் முருகனும் பின்னாடி எங்களோட இடத்துல போய் உக்கார்ந்தோம் .வீட்டுபாடங்களை எல்லோரும் எடுங்க ? கணக்கு போடதவங்க வெளியே போய் முட்டி போடுங்க என்றார் நான் மட்டும்தான் கணக்கு போடவில்லை , முருகன் கூட கணக்கு போட்டு இருந்தான் நோட்டை எடுத்துகிட்டு வெளியே வந்து முட்டி போட்டேன்.
 கணக்கு போட தெரியல , கணக்கு நோட்டுல வைத்திருந்த விதவிதமாய் சேர்த்து வைத்திருந்த தீப்பெட்டி  அட்டைகளை பார்த்து கொண்டு இருந்தேன் , ஜன்னலின் வழியே எங்க வகுப்பு லீடர்(வகுப்புத்தலைவன்) பார்த்து கணக்கு டீச்சர்கிட்ட சொல்லிட்டான் .டீச்சர் உள்ள கூப்பிட்டு வேப்பங் குச்சியால் கையை திருப்ப சொல்லி புறங்கையிலே அடித்தார். வலி உயிர் போவது போல இருந்தது. ஒரு கணக்கு போட தெரியல ,  நீ எல்லாம் எதுக்குட பள்ளிக்கூடம் வந்து என் உசிரை வாங்கர  பேசாம  கிழங்கு மிஷுனுக்கு வேலைக்கு போலாம்மில்ல , நீயெல்லாம் உருப்படவே மாட்ட  என்றார். வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள்.அதுக்குள்ள அடுத்த வேளைக்கான மணி அடிக்க தமிழய்யா வந்து விட்டார் வந்ததும் எல்லோரையும் இறைவாழ்த்து படிக்கச்சொன்னார் , நான் திக்கி , திக்கி வாசிக்க வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள் .என்னை அமர சொல்லிவிட்டு . தடுமாறி படிப்பவர்களை பார்த்து சிரிப்பது தவறு என்று கூறி வகுப்பில் உள்ள அனைவரையும்  நிற்கச்சொல்லி விட்டார். வகுப்பு லீடர் என்னை விரோதி மதிரி முறைத்து பார்த்தான் ஒரு பத்து நிமிடம் நிற்கச்சொல்லி விட்டு அனைவரையும் உக்காரச்சொன்னார் தமிழ்ய்யா . மதியம் சாப்பிடும் போது தீப்பெட்டிக்குள் வைத்திருந்த பொண்வண்டை வெளியே எடுத்தேன் எல்லோரும் பொண்வண்டை ஆசையாய் பார்த்தார்கள் . வகுப்பு லீடரின் ஆறாவது படிக்கும் தங்கச்சி பொண்வண்டு  வேணும்னு வகுப்பு லீடரை கேட்டுக்கொண்டு இருந்தாள் அவனோ  என்னிடம் கேட்காமலே , ‘அதெல்லாம் நமக்கு வேண்டாம் நீ வகுப்புக்கு போ ’ என்று விரட்டினான் . அந்த தங்கையோ என்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போனாள் . நான் வேகமாக ஓடி பொண்வண்டு இருக்கும் தீப்பெட்டியை அவளிடம் கொடுத்தேன் . இப்போதும் அவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சென்றாள் மகிழ்ச்சியுடன்.

0 comments to “பொண்வண்டு”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates