ஞாயிறு, 3 ஜூலை, 2011

பலூன்காரன்

,
                                                         

வேப்பம் பூக்களின் வாசணையில் மலரும் கோடையில் யாருமற்ற நீண்ட தெருக்களில் மணியடித்து கொண்டே செல்லும் பலூன்காரனை  பார்த்திருக்கிறீர்களா ? கண்களில் மகிழ்ச்சி பொங்க மணியடித்து கொண்டு வரும் பலூன்காரனை எங்காவது நீங்கள் பார்த்திருக்க கூடும் .
எண்ணை தேய்காத தலையுடனும் காலை இலுத்து இலுத்து நடந்து வரும் பலூன்காரனை பார்த்ததும் அவன் பின்னால் நாங்கள் எல்லாம் தொடர்ந்து செல்வோம் , எங்களிடமோ காசு இருக்காது , பலூன்காரனோ எங்களை விரட்டிக்கொண்டே மணியடித்து செல்வான் .மஞ்சளும் , பச்சையும், ஊதா வண்ணத்திலும் இருக்கும் பலூன்கள் எங்களை பலூன்காரன் பின்னால் அலையவிட்டு கொண்டு இருக்கும் . காலியாக கிடக்கும் சிகரெட் பாக்கெட்டை மடித்து பீபீ..செய்து அதை ஊதிக்கொண்டே அவன் பின்னால் அலைவோம் யாரவது வாங்க வரமாட்டார்களா என்று வேகமாக மணியடிப்பான் .தெருவில் திரியும் நாய்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டு அவனை துரத்தும்.
சோளக்காட்டில் சோளகதிர்களை அறுத்த பின்பு கூம்பு கூம்பாக நிறுத்தி வைத்திருப்பார்கள் நாங்கள் சோளக்கூம்புக்குள் ஒளிந்து கொள்வோம் கூழாங்கற்களை தூக்கி எறியவோண்டும் யார் குறைவான தூரம் வீசுகிறார்களோ அவங்கதாம் எல்லோரையும் கண்டு பிடிக்க வேண்டும். எப்போதும் தங்கை என்னுடன் தான் ஒட்டிக்கொண்டு திரிவாள் . அவளை விளையாட்டிற்கு சேர்த்திக்கொள்ள மாட்டார்கள் ஆனாலும் என்னோடுதான் அவள் இருப்பாள் . ஒளிந்து கொண்டு ஓடும் போது சோளக்கட்டை தங்கையின் காலை கிழித்து விட்டது காலெல்லாம் ஒரே ரத்தம் தங்கையோ ஓ….ஓ.. வென்று கத்தியதால் தங்கையை தூக்கி கொண்டு வீட்டிற்க்கு வேகமாக ஓடினேன் . வீட்டிற்கு முன்பு திண்ணையில் பலூன்காரன் உட்கார்ந்திருந்தான் . பலூன்காரனின் குச்சியில்  சின்னதும் பெரியதுமாக வண்ண வண்ண பலூன்கள் இருந்தது தங்கை அழும் சத்தம் கேட்டு அம்மாதான் ஓடி வந்தாள் தங்கையின் ரத்தத்தை பார்ததும் அம்மா என்னை அடிக்க ஒடி வந்தாள் தங்கையும் அம்மா பின்னாலே நொன்டிக்கொண்டே ஓடி வந்தாள் . அவன் கூட சேர்ந்து சுத்தாதே என்று உனக்கு எத்தனை முறை சொல்வது என்று தங்கையை ஓங்கி முதுகில் ஒரு அடி வைத்தாள். வீட்டிற்க்கு சோறு திங்க வராமவா  போற அப்போ உன்னை வச்சுக்கறேன் என்று கூறி விட்டு தங்கையை தூக்கி கொண்டு வீட்டிற்கு சென்றாள் நானும் அம்மா பின்னாலே மெதுவாக வீட்டுக்கு போனேன் பலூன்காரன் “தாத்தா தாத்தா காசு கொடு இல்லைனா உன் தலையை வெட்டுவோம்னு “ விளையாடுற செடியின் இலைகளை கசக்கி சாறினை தங்கச்சியின் கால்களில் விட்டு கொண்டு இருந்தான். அம்மா அண்ணனுடைய பழைய சட்டையை கிழித்தாள் அது ஏற்கனவே நைந்து போய் இருந்ததால் அம்மா கிழிக்க வேகமாக கிழிந்தது . பலுன்காரன்தான் தங்கச்சிக்கு கட்டு போட்டான் .தங்கச்சியின் அழுகைய நிறுத்த பலூன்காரன் இரண்டு பலூன்களை பிரித்து தந்தான்.அம்மா அவனுக்கு சோளக்கஞ்சி ஊத்தினாள் . ஏன்டா குரங்கு மாதிரி அங்கேயே நின்னு பார்த்துக்கிட்டு இருக்கிற வா நீயும் வந்து கஞ்சி குடி என்றாள் நானும் பயந்துகொண்டே போனேன் அம்மா ஒரு தட்டில் ஒரு சோளக்கட்டியை வைத்துவிட்டு உள்ளே போனாள் நான் சோளக்கட்டியை பிசைந்து கொண்டே பலூன்காரனை பார்த்தேன் நீண்ட நரைத்த தாடியும் சுருக்கங்கள் விழுந்த முகமும் தனது சொந்த வீட்டிலிருந்து முதுமையால் துரத்தப்பட்டதை சொல்லும் கண்களையும் என்னால் இன்று கூட மறக்க முடியவில்லை. “தாயீ போய்ட்டு வரேன் சாமீ’ என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டு அந்த பலூன்காரன்  மணியடித்து கொண்டு போவதை நானும் எனது தங்கையும் பார்த்துக்கொண்டு இருந்தோம் தங்கை எனக்கு ஒரு பலூன் தந்திருந்தாள் ஒரு கையில் பலூனும் மறுகையில் தங்கையையும் பிடித்திருந்தேன். அந்த நீண்ட தெருவின் வழியே பலூன்காரன் சென்றுகொண்டு இருந்தான். அதற்க்கு பிறகு அந்த பலூன்காரனை பார்க்கவே முடிந்ததில்லை.

0 கருத்துகள் to “பலூன்காரன்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates