Wednesday 20 July 2011

கல்லைச்செடியும் கைப்பிடி சோறும்

,
குளிர் ஊசியாய் குத்துவதால் அண்ணன் போர்த்தி இருக்கும் பழைய போர்வையை இழுத்து இழுத்து போர்த்திக்கொள்ளுவேன் .அண்ணானோ எனக்கு போர்வையை தரமாட்டான் எனவே அண்ணனை பின்புறமாக இறுக்கி படுத்திருப்பேன் .
                                                                                 
கல்லைச்செடி பிடுங்க அம்மா என்னைத்தான் எழுப்புவாள் , நானோ தூக்கத்தில் இருப்பது போல இருப்பேன் எழும்பவே மாட்டேன் , அண்ணன்தான் என்னை அப்படியே தூக்கி உக்கார வைச்சுட்டு அவன் படுத்துக்குவான் . நான் தூக்கத்தில் மயங்கி விழுவது போல மறுபடியும் படுத்துக்குவேன். அம்மாதான் வம்படியாக எழுப்பி கல்லைச்செடி பிடுங்க கூட்டிக்கிட்டு போவாள். ஊரே உறங்கி கொண்டு இருக்கும் அதிகாலையில் ஏரியை தாண்டி போக வேண்டும் எனும் நினைப்பே பயமாக இருக்கும் எப்பவே செத்துப்போன கோடாங்கி கிழவன் .ஏரிக்குள்ள இருக்கறதாதான் ஊருக்குள்ள பேசிக்குவாங். அந்த அதிகாலை வேளையிலும் சேகர் வீட்டுக்கிட்ட கல்லைச்செடி பிடுங்க ஒரு கூட்டம் கூடி இருக்கும் .பெரியாயி கிழவிதான் எங்களையெல்லாம் கல்லைச்செடி பிடுங்க ஒவ்வொரு காட்டுக்கும் கூட்டிக்கிட்டு போவா .தூரம் அதிகமான இடங்களுக்கு டிரக் வண்டில போவோம் .கடலை காட்டுக்கு போனா பெரியாயி கிழவிதான் இடத்தை பிரிச்சு விடுவா .வெயில் வரதுக்குள்ள கல்லைச்செடிகளை வேக வேகமாக பிடுங்கி குட்டாம் ,குட்டாமாக போட்டுருவோம் சூரியன் வந்துட்டா மண் இறுகி போய்விடும் .கல்லைச்செடிகள் பிடுங்குவது கஷ்டமாக போய்விடும் .கல்லைச்செடிகள் பிடுங்குவதில் எனக்கும் சேகருக்கும் எப்பவுமே போட்டிதான் , சேகர்தான் பல முறை ஜெயித்திருக்கிறான் அவன் வேக வேகமாக , தாவி தாவி செடிகளை பறிப்பான் .பெரியாயி கிழவி சேகருக்குளொல்லு புட்டினு பேரு வைத்து இருந்தா  . சேகரை யாராவது ளொல்லு புட்டினு கூப்பிட்டா போதும் ரெண்டு கையிலும் கல்லைச்செடிகளை பிடுங்கிகிட்டு அவங்களை அடிக்க ஓடுவான்.
                                                                  
 கல்லைச்செடிகளை சூரியன் வருவதுக்குள்ள பிடுங்கி போட்டுருவோம் .பின் கல்லைச்செடியிலிருந்து கல்லக்காய்களை வேரிலிருந்து திருவ வேண்டும். வேரில் கொத்து கொத்தாக கல்லக்காய்கள் காய்த்து இருக்கும் . பிடுங்கி போட்ட கல்லைச்செடியை எடுத்து உதற வேண்டும் அதில் பிடித்து இருக்கும் மண் உதிர்ந்துவிடும் பின்பு வேர்வரை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால் கல்லைச்செடியை திருவ வேண்டும் . அப்படி திருவினால் கல்லக்காய்கள் ஒவ்வொன்றாக உதிரும். செடியை புடுங்கி இருப்பதால் கையெல்லாம் வலித்திருக்கும் வலியோடு வலியாக கல்லக்காய்களை திருவ வேண்டும் .சாயங்காலம் ஆகிட்டா திருவிய கல்லக்காய்களை ஒரு பெரிய வாளியில் அளப்பார்கள். எத்தனை வாளி திருவி இருக்கிறோமோ அதற்க்கு தகுந்தவாறு காசு தருவார்கள் .
                                                        
உச்சி வெயில் வந்துட்டா நானும் சேகரும்  குட்டன் குட்டானாக பிடுங்கி போட்டிருக்கும் கல்லைச்செடிகளை தாவும் விளையாட்டை விளையாடுவோம்.பெரியாயி கிழவியின் குட்டானை கலைத்து விட்டால் எங்களை அடிக்க ஒடியாருவா .அதுக்குள்ள நாங்க வேற குட்டானை தாவ ஓடிருவோம் விளையாடிட்டு வந்தா அம்மா ஒரு வாளி கல்லக்காய்களை திருவி இருப்பாள்.பசிக்குதுனு சொன்னா தூக்குபோவனியில் மோர் கலந்து இருக்கும் பழைய சோற்றை பிசைந்து ஒவ்வொரு கவளமாக உருட்டி தருவாள் . கடித்துக்கொள்ள கல்லக்காய்களை உரித்து கல்லப்பருப்புகளை வைத்திருப்பாள் . சூரியன் மறையும் வரை கல்லக்காய்களை திருவுவேம் அதிகாலை புறப்பட்ட நாங்கள் இரவுதான் வீடு திரும்புவோம் .கல்லைசெடி பிடுங்க கஷ்டமாக இருந்தாலும் நானும் சேகரும் மீண்டும் அடுத்த சனி ,ஞாயிரு பள்ளி விடுமுறையை எதிர் நோக்கி இருப்போம் கல்லக்காய்களை திருவ.

0 comments to “கல்லைச்செடியும் கைப்பிடி சோறும்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates