Monday, 15 August 2011

கருங்குழிகள் ( Black holes)

,

                   
கருங்குழிகள் பற்றிய அடிப்படை கருத்துகளை முதன் முதலாக கூறியவர்  பிரெஞ் நாட்டின் மிகப்பெரிய கணித மேதை லாப்லாஸ்(1796) ஆவார்  இருப்பினும் கருங்குழிகள் எனப்பொருள்படும் Black hole என பெயரிட்டவர் அமெரிக்க விஞ்ஞானி ஆர்சிபால்டு வீலர் .
கருங்குழிகள் என்பது பிரபஞ்ச வெளியில் ஈர்ப்பு விசையை உட்புறமாய் இழுத்துக்கொண்டு இருக்கும் பேரடர்த்தி கொண்ட ஒரு குழிப்பகுதி அதாவது  கருங்குழிக்குள் ஒரு குண்டு ஊசியின் எடை பல மில்லியன் டன்களாகும் அதன் அருகே எது வந்தாலும் அவற்றை விழுங்கிவிடும் தன்மை கொண்டவை  கருங்குழிகள் அருகே ஒளிக்கதிர்கள்  சென்றால்கூட விழுங்கப்பட்டுவிடும் அல்லது ஒளி வளைக்கப்பட்டு விடும்
 டேய் ரமேஷ்…. டேய் சுரேஸ் என்னட நம்ப  அறிவியல் டீச்சர் ஒளி நேர்க்கோட்டில்தான் செல்லும் ஒளியை வளைக்கவோ முறிக்கவோ முடியாதுனு சென்னாங்க இவர் என்னடான்னா ஒளி வளையும்னு உடான்ஸ் உடறார் ,நம்மபளை என்னானு நினைச்சுக்கிட்டார்  இந்த அ.குரு அப்படின்னு ரமேஸ், சுரேஸ் வாய்ஸ்ல நீங்க கேட்பது எனக்கும் கேக்கிறது  நான் சொல்லறதை விடுங்க நம்ம அறிவியல் உலக சூப்பர் ஸ்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஒளிக்கு வளையும் பண்பு உள்ளது என சொல்லியிருக்கிறார்  அவர் கூறிய கோட்பாடு சூரியகிரகணம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே ஒளி கூட  கருங்குழிக்கு அருகே ஒளி செல்ல முடியாத்தால் காலம் அங்கே முடிவடைவதாக இந்த நூற்றான்டின் மிகப்பெரிய வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியிருக்கிறார் மேலும் ஹைசன்பர்க்கின் கதிர்துகள் நியதி (Quantum Theory ) , ஐன்ஸ்டீனின் பொது ஒப்பியல் நியதி (General Unified Theory) ஆகிய இரண்டு விதிகளையும் நிரூபிக்கும் வகையில் கருங்குழிகள் கதிர்வீச்சை வெளியேற்றுகின்றன  எனவும் ஸ்டீபன் ஹாக்கிங் நிரூபித்துள்ளார்


விண்மீனில்  நிறைச்செரிவு காரணமாக , நிறைச்செரிவு அதிகமுள்ள பகுதிகள் ஏனைய பகுதிகளை ஈர்க்கின்றன . இதன் விளைவாக விண்மீன் சுருங்க தொடங்குகிறது  மேலும் மேலும் சுருங்க சுருங்க விண்மீனின் சுழலும் வேகம் அதிகரிக்கின்றது . இவ்வாறு சுருங்கி சிவப்பு அரக்கன் 
(Red Giant) எனும்  நிலையை அடைந்து பின்னர் வெள்ளைக்குள்ளன் 
( White Dwarfs )  நிலையை அடையும் பின்பு  ஈர்ப்பியல் நொருங்கல்
( Gravitational collapse) மூலம் அழிக்கப்படலாம் அல்லது புதிய விண்மீன்திரள்கள் உருவாக்கப்படலாம்
 நமது சூரியனும் ஒரு விண்மீன்தான் எனவே சூரியனும் ஒருநாள் வெள்ளைக்குள்ளன் ( White Dwarfs )   நிலையை அடைந்து அழிந்துவிடும் 
கருங்குழிக்கருகே ஒளி செல்ல முடியாத்தால்  கருங்குழியின் இருப்பிடத்தை தொலைநோக்கியால் அறிய முடியாது ஆனால் கருங்குழியில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை பூமியில் இருக்கும் வானலை நோக்கிகளிள் (Radio Telescopes) பதிவு செய்வதின் மூலம் கருங்குழிகள் இருப்பிடத்தை அறியலாம்  
நிறை பெருத்த விண்மீன் தனது எறிபொருள்  யாவும் தீர்ந்த பின் சிதைந்து  ஈர்ப்பாற்றல் மிகுந்து அதன் உருவம் குறுகி முதலில்  நியூட்ரான் ஸ்டார் எனப்படும் துடிக்கும் விண்மீன் உண்டாகிறது   
நியூட்ரான் விண்மீன்களை பற்றி அறிய  எனது முந்தைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் .நியூட்ரான் ஸ்டார்
பின்பு காலப்போக்கில் கருங்குழி உண்டாகிறது அதன் வடிவம் ஒரு வளைவான கோண விளிம்பால்(Spherical Boundary) சூழப்பட்டுள்ளது ஒளியே நுழையமுடியாததால் கருங்குழிகள் முழுக்க முழுக்க கருமை அண்டமாக இருந்தும் காண முடியாத மாய பொருளாய் விளங்குகிறது,


கருங்குழிகள் இருபதற்க்காண ஆதாரங்கள்
1987 இல் மனிதன் தொலைநோக்கியில் பார்த்த முதல் சூப்பர் நோவா 1987A ஆகும்  இதை சுற்றி மூன்று வளையங்கள் இருந்தன அவைகள் 20000 ஆண்டுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட பொருள்கள் வாயுக்களின் வளையமாக இருந்தன.  அவற்றில் இருந்த கருங்குழிகள் கதிர்வீச்சை உட்கவர்ந்து வந்தன .
ஆன்ட்ரோமீடா  காலக்ஸியில்   M31 ,M32 பகுதிகளிலும் , லிப்ரா கேலக்ஸியில் NGC 5728 பகுதியிலும் கருங்குழிகள் இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதி வந்ததை ஹப்பிள் தொலைநோக்கி விர்கோ (Virgo) விண்மீன்  கூட்டத்தில்  NGC 4261 என்ற விண்மீன்திரளின் மையத்தை சுற்றி ஒரு வட்டத்தகடு போல் வெப்பக்காற்று சுழலுவதையும்  இது திறன் வாய்ந்த துகள் வீச்சுகளுக்கு ஆற்றலை அளித்து வருவதை கண்டது.
1994 இல் M87 விண்மீன்திரளிலும் வட்டத்தகடு போல் வெப்பக்காற்று சுழலுவதையும்   ஹப்பிள் கண்டுபிடித்தது .அத்திரளின் மையம் அதிக திசை வேகத்தில் தனது பருப்பொருளை வெளியேற்றி வருகிறது  ஆகவே கருங்குழியில் இருந்து இப்பொருள்கள் வெளியேற்றப்படுகிறது
M-87 வின்மீன் திரளில் ஒரு கருங்குழி உள்ளது.
அறுபது ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள NGC 1068 என்ற விண்மீன்திரளின் படத்தையும் ஹப்பிள் எடுத்துள்ளது . இது நமது சூரியனைவிட ஒரு மில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் உடையதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .( நமது பழங்கால இலக்கியங்களில் கூட ஆயிரங்கோடி சூரிய பிரகாசத்துடன்  இறைவன் விளங்குகிறான் என்று கூறப்படுகிறது )
ஆனால் NGC 1068 விண்மீன்திரளின் வெளிச்சம் சில சமயம் அதிகமாக காணப்படுகிறது சில சமயம் குறைந்து காணப்படுகிறது . இதனால் ஒளி தோன்றும் இடத்தின்  குறுக்களவு ஒரு சில ஒளி ஆண்டுகளாகத்தான் இருக்கும் எனவும்  அது ஒரு கருங்குழியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது .
நண்பர்களே இத்துடன் கருங்குழிகள் பதிவை முடித்துக்கொள்கிறேன் கருங்குழிகள் தோன்ற காரணமாக இருக்கும் “ சூப்பர் நோவா ” பற்றிய ஒரு  பதிவிடல் செய்யும் போது மீண்டும் கருங்குழிகள் பற்றி கூறுகிறேன் உங்களுக்கு  ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கருத்துரை பகுதியில் கூறவும்
நெஞ்சம் நிறைந்த நேசங்களுடன்
அ.குரு

0 comments to “கருங்குழிகள் ( Black holes)”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates