Monday, 23 September 2013

ஓரிகாமி - குழந்தை செல்வங்களின் கற்பனையை வளர்க்கும் கலை

,



நண்பர்களே உங்களுக்கு ஓரிகாமி எனும் உன்னத கலையைப்பற்றி தெரியுமா ? வாருங்கள் அறிந்து கொள்வோம் . ஓரிகாமி எனப்படும் கலையானது சீனாவில் பிறந்தாலும் ஜப்பனில்தான் முழு வளர்ச்சி அடைந்தது . ஓரிகாமி (origami)என்பது காகிதத்தை மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் ஓர் கலையாகும். 'ஓரி' என்பது தாளையும் 'காமி' என்பது தாளை மடித்தலையும் குறிக்கும். பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் புகழ்பெற்ற இக்கலையானது 1900-களில் மற்ற நாடுகளுக்கும் பரவியது . ஒரு சமதள பரப்புள்ள காகிதத்தை மடித்தல் மற்றும் வளைத்தல் மூலமாக மட்டுமே உருவங்கள் உடைய ஒரு கலைப் படைப்பாக மாற்றுவதே ஓரிகாமி ஆகும். இக்கலையில் வெட்டுதல், ஒட்டுதல் ஆகியவை பயன்படுத்தப்படுவதில்லை. அவ்வாறு வெட்டி ஒட்டுவது கிரிகாமி என்னும் கலையாகும். தற்பொழுது நவீன வடிவில் ஓரிகாமி கலை பயிற்றுவிக்கப்படுகிறது . ஓரிகாமி மிகச்சிறந்த பொழுதுபோக்கு கலையாகும் இதனை பயிலுவதால் மாணவச்செல்வங்களின் கற்பனை வளம் பெருகும் . ஓரிகாமி கலையின் நுட்பங்கள் பொறியியல் துறையிலும் பயன்படுகிறது .
சமாதனத்தின் சின்னமாக ஓரிகாமி மாறிய கதை

ஒரு சிறுமியின் உண்மை வரலாறு இது. அவள் பெயர் சடகோ. முழுப் பெயர் சடகோ சசாகி. அவள் ஜப்பான் நாட்டுச் சிறுமி. ஜப்பானில் இரு இடங்களில் அமெரிக்கா குண்டு வீசியது. ஒன்று ஹிரோசிமா; மற்றொன்று நாகசாகி. அக் குண்டுவீச்சில் இரண்டு இலட்சம் ஜப்பானியர் இறந்தனர். ஹிரோசிமாவுக்கு அருகில் சடகோ, தன் பெற்றோருடன் வசித்து வந்தாள். அப்போது அவளுக்கு இரண்டு வயது. குண்டுவீச்சில் அவள் குடும்பம் தப்பியது. சடகோ பள்ளியில் சேர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு 11 வயது ஆனது. ஒருநாள் பள்ளியில், அவள் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது, திடீரென மயங்கி விழுந்தாள். மருத்துவர் அவளைச் சோதித்துப் பார்த்தார். அவளுக்குப் புற்றுநோய்  அணுகுண்டு வெடித்தபோது உண்டான கதிர்வீச்சுதான் இதற்குக் காரணம். சடகோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். புற்றுநோய் ஆளைக் கொல்லும் என்று சடகோ தெரிந்து கொண்டாள். ஆனால், சடகோ சாக விரும்பவில்லை;உயிர்வாழவே ஆசைப்பட்டாள். ஒருநாள் சிசுகோ என்ற தோழி, அவளைப் பார்க்க வந்தாள். சிசுகோ கை நிறைய காகிதங்கள் எடுத்து வந்தாள். அந்தக் காகிதங்கள்  சதுரம் சதுரமாக வெட்டப்பட்டு இருந்தன. ஒரு காகிதத்தைச் சிசுகோ எடுத்தாள் அப்படியும் இப்படியும் காகிதத்தை மடக்கி கொக்கு ஒன்று செய்தாள். ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு. சிசுகோ சொன்னாள். """"சடகோ, கவலைப்படாதே! நான் செய்ததுபோல் ஆயிரம் கொக்குகள் செய்! நோய்  குணமாகும். இது நம் நாட்டு நம்பிக்கை"" என்றாள். சடகோவுக்கு நம்பிக்கை கிடைத்தது; துணிச்சல் பிறந்தது. நாள்தோறும் கொக்குகள் செய்ய தொடங்கினாள். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு இருபது கொக்குகள் செய்தாள். போகப்போக உடம்பில் வலிமை குன்றியது. அவளால், ஒரு நாளைக்கு மூன்று கொக்குகள்கூடச் செய்ய  இயலவில்லை. தன்னை மரணம் நெருங்கிவிட் தனை உணர் ந் தாள். ஆனாலும், அவள் காகிதக் கொக்கு செய்வதனை மட்டும் நிறுத்தவே இல்லை. கொக்கு செய்யும்போது, அவள் கவலையை மறந்திருந்தாள். ஒருநாள், அவளால் ஒரு கொக்கு மட்டுமே செய்ய முடிந்தது. அதன்பிறகு, அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. 1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் சடகோ இறந்துவிட்டாள். சடகோவின் படுக்கை முழுவதும் காகிதக் கொக்குகள் இருந்தன. மொத்தம் அறுநூற்று நாற்பத்து நான்கு கொக்குகள்  இருந்தன. ஆயிரம் கொக்குகளுக்கு சிறுமி சடகோ இன்னும் முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் செய்ய  வேண்டும். தோழிகள் கூடி முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் செய்தனர்; எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.  தன் வாழ்நாளின் இறுதிவரை நம்பிக்கையுடன் வாழ்ந்தவள் சடகோ. தான் தொடங்கிய செயலை, அவள் நிறுத்தவே இல்லை. அவளுக்கு ஒரு நினைவாலயம் கட்ட வேண்டுமென்று தோழிகள் நினைத்தார்கள். அதற்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். ஹிரோசிமா நகரின் மையத்தில் நினைவாலயம் கட்டினார்கள். அதனுள் சடகோவுக்குச் சிலை வைத்தார்கள். அதற்குக் குழந்தைகள் அமைதி நினைவாலயம் என்று பெயர் சூட்டினார்கள். நினைவாலயத்தில் பின்வருமாறு எழுதி வைத்தார்கள்.
        உலகத்தில் அமைதி வேண்டும்!
 இஃது எங்கள் கதறல்! இஃது எங்கள் வேண்டுதல்!
( நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அந்த நினைவாலயம்
வருகின்றனர். சடகோ சிலைக்குக் காகிதக் கொக்குகள் செய்து வணங்குகின்றனர். )
 

1 comments:

  • 29 January 2024 at 06:41
    Anonymous says:

    நெஞ்சம் கலங்கிப் போனது.வல்லரசுகளின் பேராசைக்கு இரையாகிப் போன் சிறுமியின் உண்மைக்கதையை வாசித்த பொழுது..

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates